ஸ்ரீ:
ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹபரப்ரஹ்மணே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
Dr.S.MUTHU 03.01.2018
Associate Professor, Dept of Sanskrit
RKM
Vivekananda College, Mylapore, Chennai-4
நம்மை பற்றிய சிந்தனைகள்
यस्याभवद्भक्तजनार्तिहन्तुः पितृत्वमन्येष्वविचार्यतूर्णम्।
स्तम्भेSवतारः तमनन्यलभ्यं लक्ष्मीनृसिंहं शरणं प्रपद्ये।।
ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹருடைய
கிருபாகடாக்ஷத்தாலும் ஸ்ரீமத் அழகியசிங்கருடைய அனுக்ரஹத்தாலும் நமது மதுராந்தகம்
ஸ்ரீஅஹோபிலமடம் வேதப்ரபந்த சாஸ்த்ர கலாசாலை நமக்கு கிடைதிருக்கும் பொக்கிஷமாகும். தற்சமயம்
நம் கலாசாலை வெள்ளிவிழா கொண்டாடுவதைக் கண்டு சந்தோஷமடைகிறோம். அடியேனுடைய தகப்பனார்
ஸ்ரீ.ஸ்ரீநிவாஸபட்டாச்சாரியார் அவரைப்போன்று அடியேனும் எனது தமயன் ஸ்ரீ.சுதர்ஷன் (தற்சமயம் தஞ்சாவூர் சரஸ்வதிமஹால் நூலகத்தில் இருக்கிறார்) இருவரும் ஏதோ ஒரு
பாசடாலையில் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டார். அதன் வ்யாஜமாக அடியேன் 1980ம் வருடம்
ஜூலை மாதம் ஏழாம் வகுப்பிலும், எனது தமயன் ஒன்பதாம் வகுப்பிலும் ஸ்ரீஅஹோபிலமடம் ஓரியண்டல்
உயர்நிலைப் பள்ளி கலாசாலையில் சேர்ந்தோம். ஸ்ரீமதழகியசிங்கர் அனுக்ரஹத்தால்
பாடசாலையானது அத்யற்புதமான ஸன்னிவேசத்தைக் கொண்டதாக இருந்தது ஏன் தற்சமயமும்
இருந்துகொண்டிருக்கிறது. தினமும் அதிகாலையில் 4.30 மணிக்கு வேதம், ப்ரபந்தம்
வகுப்பு, காலையில் நித்யகர்மானுஷ்டானம் ஸந்த்யாவந்தனம் 7.30 முதல் 8.30 மணிவரை
படிக்கும் நேரம், போஜனம் 9.45 மணிக்கு ப்ரார்த்தனை தஸாவதார ஸ்தோத்ரம் பிறகு
1 மணிவரை லௌகீகம் மற்றும் சாஸ்த்ர பாடங்கள் அத்யயனம், 1.30 மணிக்கு மோர் சாதம், 2
மணிமுதல் 4.45 வரை லௌகீகம் மற்றும் சாஸ்த்ர பாடங்கள் அத்யயனம், 5 மணிமுதல் 5.45
வரை வைகானஸசாஸ்த்ர அத்யயனம், 6 மணிக்கு ஸந்த்யாவந்தனம், 6.15 மணிக்கு ஸ்ரீவிஷ்ணுஸஹச்ரநாமபாராயணம்
இரவு 7.30 மணிக்கு போஜனம், 8.30 மணி முதல் 9.30 மணிவரை படிக்கும் நேரம் பிறகு
ஓய்வு தூக்கம் என நேரத்தை வீணடிக்காமல் ஒவ்வொரு நாளும் பொற்காலமாக இருந்தது. கலாசாலை
விடுமுறை நாட்களில் மதியத்தில் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்த்ர அத்யயனம் கடுக்கலூர்
ஸ்ரீமான் ஸ்ரீ உ வே எஸ்.ஸ்தலசயன பட்டாச்சார் ஸ்வாமி மூலம் நிறைய விஷயங்கள் ஆசார்யர்கள்
அனுக்ரஹத்தினாலே செய்விக்கப்பட்டன.
1980ம் வருடம் எங்களை கலாசாலையில்
சேர்க்க வேண்டும் என எங்களது தகப்பனார் பிரின்ஸ்பால் ஸ்வாமி ஈச்சம்பாடி ஸ்ரீஉவே
தி.ராமஸ்வாமி அய்யங்காரை சந்தித்தபோது சுமார் ஒருமணி நேரம் ஸம்ஸ்க்ருதத்தின்
பெருமை அதன் அத்யாவச்யம் எதிர்காலத்தில் பெரிய வித்வானாக வரும் வாய்ப்பு
போன்றவற்றை கூறி உடனடியாக எங்களை வித்யார்த்தியாகச் சேர்த்துக் கொண்டார். அதன்
பொருள் இப்போது தான் எங்களுக்கு விளங்குகிறது “வாசமர்த்தோனு தாவதி”. அந்த க்ஷணத்திலிருந்து இன்றுவரை
எங்களை உயரந்திக் கொண்டிருப்பது நம் மதுராந்தகம் அஹோபிலமடம் கலாசாலை தான். பிரின்ஸ்பால்
ஸ்வாமி பிரார்த்தனை வகுப்பில் எப்போது பேசினாலும் “பிள்ளைகளே” என்று தான்
ஸம்பாஷணத்தை ஆரம்பிப்பார். அனைத்து வித்யார்த்திகளையும் தன்னுடைய பிள்ளைகளாகவே
பாவித்து ஸதுபதேசங்களையும், சிரோமணியில் பாஷாசாஸ்த்ரம் பாஷாசரித்ரம் போன்ற பாடங்களையும்
அத்யாபனம் செய்வித்து எங்களை வாழ்நாளில் உயர்ந்த பதவிக்கு கொண்டுவந்தார். பிரின்ஸ்பால்
ஸ்வாமியை எங்களுடைய வாழ்கையில் மறக்கவே முடியாது.
வைஸ் பிரின்ஸ்பால் என்ற ஸ்தானத்தில்
பாதூர் புராணம் ஸரளகவி வியாகரண வித்வான் ஸ்ரீஉவே ராகவாச்சாரியார் ஸ்வாமி எழுந்தருளியிருந்தார்.
இஞ்சிமேட்டு அழகியசிங்கரை குறித்து வைபவப்ரகாசிகை எனும் தலைப்பில் மங்களாஸாஸனம்
அருளிச்செய்துள்ளார். பிரின்ஸ்பால் ஸ்வாமியைப் பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் மங்களாசாசன
ஸ்லோகங்களையும் இயற்றியுள்ளார். இவர் மற்றும் வியாகரண வித்வான் களத்தூர் ஸ்ரீஉவே
வீரராகவாச்சாரியார் ஸ்வாமி, நியாய வித்வான் ஸ்ரீஉவே ஸம்பத்குமாராச்சாரியார் ஸ்வாமி
போன்ற மஹாவித்வான்கள் வராண்டாவில் சாதாரணமாக அமர்ந்துகொண்டு சிரோமணி
வித்யார்த்திகளுக்கு சாஸ்த்ரபாடத்தை சொல்லுவார்கள். பாதூர் ஸ்ரீஉவே கோபாலாச்சார்
ஸ்வாமி மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும், மேல்பாக்கம் ஸ்ரீஉவே நரஸிம்மாச்சாரியார் ஸ்வாமி வியாகரணம்
மற்றும் வேதாந்தத்தையும் அவர்களுடைய க்ருஹத்திலிருந்தே அத்யாபனம் செய்தார்கள்.
அப்போது நாங்கள் மனதில் நினைத்ததுண்டு. நாமும் இதேபோல் இந்த வித்வான்களிடத்தில்
சாஸ்த்ரபாடங்களை அத்யயனம் செய்யவேண்டும் என்று. ஸ்ரீமத் அழகியசிங்கருடைய
அனுக்ரஹத்தால் அடியோங்களும் நியாய சிரோமணி சாஸ்த்ரபாடங்களை ஐந்து வருடமும்
அத்யயனம் செய்து முழுமையாக முடித்தோம்.
எங்களுக்கு லௌகிக பாடங்களை ஸ்ரீஉவே
ஆராவமுதாச்சார், ஸ்ரீஉவே ரகுவீரபட்டாச்சார், ஸ்ரீஉவே வரதராஜாச்சார், ஸ்ரீஉவே
ஜெகன்னாதாச்சார், டாக்டர்
ஸ்ரீஉவே என் பத்ரநாதன், ஸ்ரீஉவே ராகவாச்சார், ஸ்ரீஉவே ஸ்ரீராமன் (உடற்கல்வி
பயிற்சி ஆசிரியர்) ஆகியோரிடமும் ஸம்ஸ்க்ருத பாடங்களை பாதூர் ஸ்ரீஉவே
நரஸிம்மாச்சாரியார், கல்யாணபுரம் ஸ்ரீஉவே ஜி.ஸ்ரீநிவாஸாச்சாரியார், கும்பகோணம்
ஸ்ரீஉவே ஸ்ரீநிவாஸாச்சாரியார், அன்னாதூர் ஸ்ரீஉவே தாமோதராச்சாரியார் ஆகியோரிடமும்
பயின்றோம்.
நாங்கள் ஓரியண்டல் ஸ்கூல் படிப்பை
முடித்துவிட்டு சிரோமணியில் சேர்ந்தோம். அப்போது எங்களுக்கு அத்யாபகர்களாக
உத்திரமேரூர் வீரவல்லீ ஸ்ரீஉவே வாஸுதேவாச்சார், அன்னாதூர் ஸ்ரீஉவே ராஜுபட்டர், தட்டை
ஸ்ரீஉவே லக்ஷ்மீநரஸிம்மாச்சார், செங்குறிச்சி ஸ்ரீஉவே ரங்கநாதாச்சார், தையார்
வங்கீபுரம் ஸ்ரீஉவே ரங்கராஜாச்சார், வேதவித்வான் பழவேரி ஸ்ரீஉவே சடகோபாச்சாரியார்,
நாவல்பாக்கம் ஸ்ரீஉவே வாஸுதேவாச்சார், போன்ற மஹாவித்வான்களிடத்தில் அடிப்படை
வியாகரண சாஸ்த்ரத்தையும் முக்கியான ந்யாயசாஸ்த்ர க்ரந்தங்களையும் அத்யயனம்
செய்தோம். இந்த மஹான்கள் எங்களுக்கு அனுக்ரஹம் செய்ததைக் கொண்டு இவர்கள் கூறியதில்
ஏதோ சிறிதளவு மனதில் வாங்கிக் கொண்ட சாஸ்த்ரங்களைக் கொண்டு அனுதினமும் இவர்களை
மனதில் தியானித்துக் கொண்டு பூர்ண ஜீவனத்தையே நடத்திக்கொண்டு வருகிறோம். இன்றளவிலும் மதுராந்தகம் சென்றால் கலாசாலைக்குச்
சென்று பிரார்த்தனை ஹாலில் இஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கரின் சித்ரப்ரதிமையை
ஒருதரம் பார்த்து ப்ராணாமம் செய்வதாலேயே மனதில் இருக்கும் துக்கம், கவலைகள்
அனைத்தும் அகன்றுவிடுகிறது. எங்களுடைய கலாசாலை ஏன் நம்முடைய கலாசாலை ஸ்ரீந்ருஸிம்ஹ
க்ருபையுடன் ஸ்ரீமதழகிசிங்கரின் அனுக்ரஹத்துடன் சந்திரன் சூரியன் இருக்கும் வரை
நிரந்தரமாக இருந்து நமது வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை நிலைநிறுத்தி எதிர்வரும் காலத்தில்
ஸம்ப்ரதாய சிஷ்யர்களை ஏற்படுத்தி நம் பாரதத்தை புண்யபூமியாக்கிட வேண்டும் என
நம்முடைய ஆசார்யர்களுடைய மனோரதம் முழுமையாக பரிமளிக்க ப்ரார்த்திப்போமாக. மங்களானி
பவந்து.
தாஸன்,
சங்கேந்தி ஸ்ரீ.முத்துபட்டர், சென்னை
No comments:
Post a Comment