Wednesday, May 8, 2019

Speciality of Sayanabera in Vaikhanasa Bhagavat Sastra, Sleeping posture of Lord in Vaikhanasa Sastra


ஸ்ரீ:
ஸ்ரீமத்விகனஸமஹாகுரவே நம:
ஸ்ரீவைகானஸ சாஸ்த்ரத்தில் சயனபேர ஸ்வாமியின் வைசிஷ்ட்யம்
(சங்கேந்தி டாக்டர் எஸ். முத்துபட்டர், ஸர்வசாதகம்-ஸ்ரீவடபத்ரசாயி திருக்கோவில் மஹாஸம்ப்ரோக்ஷணம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சம்ஸ்க்ருத பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, மைலாப்பூர், சென்னை-4)

ஸ்ரீலக்ஷ்மீவல்லபாரம்பாம் விகனோமுனி மத்யமாம்.
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம் பராம்.

ஸ்ரீமன் நாராயணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை வைணவத்தின்படி திருஆராதனம் செய்து அனுபவிப்பதற்காக இப்பூவுலகில் ஸ்ரீவைகானஸம் ஸ்ரீபாஞ்சராத்ரம் என இரண்டு சாஸ்த்ரங்கள் ஏற்பட்டன. அதில் ஸ்ரீவைகானஸம் என்பது மந்த்ரங்களையே முக்கியமாகக் கொண்டதாலும் பழமையிலிருந்தே அனைவராலும் ப்ரமாண க்ரந்தமாக ஏற்றுக்கொண்டுள்ள படியாலும், ஆழ்வார்கள் காலத்திலிருந்தே அவர்களால் திருப்பதி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநீர்மலை போன்ற திவ்யதேசங்களில் அனுபவித்தபடியாலும் இன்றளவிலும் எம்பெருமான் முழுமையாகத் திருவுள்ளங்கொண்டருளி தினமும் திருவாராதனதையும், மாஸோத்ஸவம், பக்ஷோத்ஸவம், திரு அத்யயனோத்ஸவம், பவித்ரோத்ஸவம், வஸந்தோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸம் போன்ற நிறைய உத்ஸவங்களை பரமானந்தத்துடன் ஏற்று கண்டருளி அனைவரையும் ரக்ஷித்து வருகிறார்.

ஆழ்வார்களால் அனுபவித்தபடி எம்பெருமானை அனுபவிக்கவில்லை என்றால் இப்பிறவி எவ்வித பலனுமின்றி பாழானதாகும் என்பதை நாம் எப்பொழுதும் சிந்தனையில் கொள்ளவேண்டும். நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தின்படி இவ்வுலகில் எளிமையாக பிறவிப்பயனை அடைவதற்கு எம்பெருமானின் அனுபவமும் அவருடைய கைங்கரியமும் /சேவையுமே சிறந்ததாகும். இக்கூற்றையே அனைத்து சாஸ்த்ரங்களும் எடுத்துரைக்கின்றது.

வேதத்தையே முக்கியமாகக் கொண்ட ஸ்ரீவைகானச பகவத் சாஸ்த்ரத்தில் எம்பெருமானின் இருப்பிடமான ஆலய நிர்மாணமும், அவருடைய திவ்யமங்கள விக்ரஹத்தை வடிவமைக்கும் முறையையும், பரிவார ஆலயங்களும் ஸம்ப்ரோக்ஷணாதி வைபவமும், உத்ஸவங்களும்  அதனைத் தொடர்ந்து புனராவர்த்தனம் செய்யும் காலம் போன்றவை மிகவும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

ஆலயவழிபாட்டில் ஆதிகாலத்திலிருந்தே கருவறையில் இருக்கும் மூலவர் எம்பெருமானை வர்ணகலாபம் கொண்டதாகவே அதாவது மூலிகைப் பச்சிலைகளைக் கொண்டு பஞ்சவர்ணம் தீட்டி நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதாகவே காணப்படுகிறது. கொஞ்ச காலங்கடந்து பஞ்சவர்ணத்தை தொடர்ந்து பாதுகாக்க இயலாமல் போனதால் தாரு பேரமாகவும், உலோக பேரமாகவும், சிலா பேரமாகவும் மாற்றினர்.

ஒரு திருக்கோயிலின் கருவரையில் இருக்கும் எம்பெருமான் பஞ்சவர்ணம் தீட்டியவராக இருந்தால் அந்த திருக்கோயில் ஆழ்வார்களின் முற்காலத்திற்கும் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஸ்வாமியின் திருவுருவத்தை சாஸ்த்ரத்தில் கூறியுள்ளபடி நின்ற திருவுருவமாகவும், அமர்ந்த திருவுருவமாகவும் அல்லது சயனித்த திருவுருவமாகவும் ஏற்படுத்தலாம் என ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்த்ரம் பரிந்துரைக்கிறது.

மதுரை கூடலழகர் ஸன்னிதியில் எம்பெருமான் அமர்ந்த திருவுருவமாகவும், முதற்தளத்தில் நின்ற திருவுருவமாகவும், மூன்றாம் தளத்தில் சயனித்த திருவுருமாகவும் காட்சியளிப்பது நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வமாகும். இவ்விஷயத்தை பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்  அனுபவிக்கிறார்.

அன்றாயர்க் குலக்கொடியோடணி மாமலர்மங்கையொடன்பளவி-அவுணர்க் கென்றானுமிரக்கமிலாதவனுக்குறையுமிடமாவதுஇரும்பொழில்சூழ்
நன்றாயபுனல் நறையூர் திருவாலிகுடந்தை தடந்திகழ்கோவல்நகர்
நின்றாநிருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம்மாமலையாவதுநீர்மலையே.


எம்பெருமானின் மூன்று நிலைகளையும் அனுபவித்த பொய்கையாழ்வாரும் முதற்றிருவந்தாதியில் இவ்வாறு அனுபவிக்கிறார்.

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்நான்கிடந்தும்
நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர்.

ஆழ்வார்களின் அனுபவத்தில் கிடந்தான் என்ற நிலையின் சிறப்பு என்னவென்றால் -  எம்பெருமானின் சயனத் திருவுருவத்திற்கேற்ப அவருடைய விமானம் மற்றும் கருவறையை நிர்மாணம் செய்ய வேண்டும். சயனபேர ஸ்வாமிக்கு ஸ்வஸ்திக விமானம், விருத்தபத்ர விமானம், விருத்தகேஹமவேதிக விமானம், ப்ரேக்ஷாக்ருஹ விமானம், மஹாராஜச்சந்த விமானம் ஸ்ரீப்ரதிஷ்டித விமானம், சனைர்யோக விமானம், மாத்ருகண்ட விமானம், கணிகாவிசால விமானம் போன்ற  ஏதேனும் ஒரு வட்டவடிவமான விமானத்தை அமைத்து அதன் அளவை மூன்று நான்கு ஐந்து ஏழு ஒன்பது பதினொரு பாகமாகச் செய்து அவற்றை முறையே ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு அம்சம் கருவறையின் விஸ்தாரமாக நிர்மாணிக்க வேண்டும். இந்த கருவறையை 256 பாகமாக (பதங்களாக-சதுரவடிவமாக) பிரித்து அதில் நடுவில் உள்ள பதினாறு பதங்கள் ப்ரம்ம ஸ்தானமாகும். அதன் அருகில் உள்ள 80 பதங்கள் தைவிக ஸ்தானமாகும், அதன் அருகில் உள்ள 80 பதங்கள் மானுஷ ஸ்தானமாகும், கடைசியில் கருவறை சுவற்றை ஒட்டியுள்ள 80 பதங்கள் பைசாசமாகும். இவ்வாறு கருவறையை ஒவ்வொரு சதுரமாகப் பிரித்து (பதவின்யாசம்) செய்து தைவிக ஸ்தானத்தில் எம்பெருமானையும், மானுஷ ஸ்தானத்தில் ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் போன்று மானுஷீக அவதாரங்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.

சயனபேர ஸ்வாமியாகில் தைவிக ஸ்தானத்தை மூன்றாகப் பிரித்து கிழக்கில் இரண்டு பாகத்தை விட்டுவிட்டு மேற்கு பகுதியில் உள்ள தைவீக ஸ்தானத்திலும் மானுஷீக ஸ்தானத்தையும் சேர்த்து இரண்டு பாகத்திலும் ஸ்வாமியை நிர்மாணம் செய்யலாம். (தைவ மானுஷபாகாப்யாம் அந்தரே சயனம் சரேத்-ப்ருகு ப்ரோக்தம்). பஞ்சவர்ண விக்ரஹமாக சயனபேர ஸ்வாமியை நிர்மானம் செய்ய ஸ்தூலஸ்தாபனம், அஷ்டபந்தனம், ரஜ்ஜுபந்தனம், ம்ருத் ஸம்ஸ்காரம், சர்க்கராலேபனம், படாச்சாதம், வர்ணஸம்ஸ்காரம் என்ற முறையை ப்ருகு மஹரிஷி மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது ஸ்வாமியை சயனம் படுத்துக்கொண்டு இருப்பவராக செய்ய வேண்டுமாகில் அவருக்கு எவ்வாறு எந்தமாதிரியான தண்டங்களையும், குச்சிகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு அஷ்டபந்தனத்தை தயார்செய்து கொண்டு சிரசு முகம் மார்ப்பு இடுப்பு கை கால் போன்ற வற்றை அந்தந்த அளவின்படி கட்டி அஷ்டபந்தனத்தைக் கொண்டு உருவமாச்செய்ய வேண்டும். வெண்மையான சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு உடம்புபோல் கரணையைக் கொண்டு பதம் செய்ய வேண்டும். வெல்லத்தை இடித்து கெட்டியாத் தடவி அதன்மேல் வெண்மையான பஞ்சினால் நெய்த துணியை சுருக்கமில்லாமல் ஒட்டவைத்து நிழலில் காயவைக்க வேண்டும். இவரைத் தனியாகச் செய்துகொள்ள வேண்டும்.

முன்பு கூறியபடி கர்பக்ருஹத்தில் அந்தந்த பதத்தில் எம்பெருமானின் சயத்திருக்கோலம் வரும்படி கணக்கிட்டு சேஷனின் (பாம்பு) வடம் (உடம்பு) சுற்றி வரும்படி உருவத்தைச் செய்து அதற்கும் குச்சி வைத்துக் கட்டி, அஷ்டபந்தனம், சுண்ணாம்பு, வெல்லத்தின் ஜலம் தடவி வெண்மையான துணியை ஒட்டவைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அந்தந்த பதக்ரமம் மாறாமல் இருக்கும்படி ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். இது ஒரு ஹ்ருதயத்தை தாங்கி செயல்படப் போகும் தைவம் என்பதை அவ்வப்போது நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்த இரு பாகங்களும்ம் ஓரளவிற்கு காயந்த பிறகு தனியாகச் செய்த சயனபேரஸ்வாமியை எடுத்துக் கொண்டுபோய் பாம்பின் மேல் சரியான அளவில் வைத்து கட்டி அதன் மேல் சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு இணைத்து ஈரம் காயும் வரைக் காத்திருக்க வேண்டும். இவருக்கு ரத்னந்யாம் பாதத்தின் அருகில் செய்ய வேண்டும். (சயனே தேவதேவஸ்ய பாதபார்ச்வே சிலாம் ந்யஸேத், பாதஸ்பர்சே பவேத்யத்ர தத்ர ரத்னானி ஸன்ந்யஸேத்-ப்ருகு ப்ரோக்தம்).

இதே போல் ஸ்ரீதேவி பூமிதேவி நீளா தேவி, ரிஷிகள் போன்ற விக்ரஹங்களை ஸ்வதையில் அவரவர்கள் இடத்தில் எம்பெருமானின் அருகிலும், மது-கைடபர்கள் சங்கன் சக்ரன் சார்ங்கன் கட்கன் கௌமோதகன் தேவதேவர்கள் போன்றவர்களை கர்பக்ருஹத்தின் சுவற்றிலும் சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு ஸ்வதையில் நிர்மாணம் செய்து வெண்மையானத் துணியைக் கொண்டு ஒட்டவைத்து காய்ந்த பிறகு அனைத்து பிம்பங்களுக்கும் கடுக்காய் சுக்கு மிளகு திப்பிலி போன்ற துவர்ப்பான பொருட்களை காயவைத்து இடித்து ஜலத்தில் கொதிக்க வைத்து துணியின் மேல் பூசவேண்டும். ஒவ்வொரு பிம்பத்தின் உடம்பிலும் துணி நன்கு ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு மற்ற பூச்சிகளால் கேடு விளைவிக்காத அளவிற்கு அப்பசை தெரியும் வரை நான்கு ஐந்து தடவை பூசவேண்டும். பிறகு ஏழு அல்லது 15 நாட்கள் காயவைத்து மெல்லிய தோல் வருவதற்கு சுண்ணாம்பு பசையைத் தடவி பச்சிலைகளைக் கொண்டு பஞ்சவர்ணம் தீட்டப்படவேண்டும். இவ்வாறு ஸ்ரீவைகானஸ சாஸ்த்திரன்தின் படி செய்யப்பட்டவர் தான் நம்முடைய வடமஹாதாம ஸ்வாமி என்கிற வடபத்ரசயனபேரப் பெருமாள்.

இப்படிப்பட்ட சயனபேர ஸ்வாமியைப்பற்றி  ஸ்ரீவைகானஸம் ப்ருகு ப்ரோக்தத்தில் மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது. 1.யோகசயனப் பெருமாள், 2.வீரசயனப் பெருமாள், 3.போகசயனப் பெருமாள்.

1.யோகசயனப் பெருமாள் அனந்தன் எனும் வெள்ளை நிறமுள்ளதாயுள்ள ஐந்து தலையுடனிருக்கும் பாம்பின் படத்தின் கீழ் சிரஸை வைத்துக்கொண்டு (பாம்பின் மூன்றில் ஒரு பாகத்தில்) ஸ்வாமி யோகத்தில் படுத்துக் கொண்டு இருப்பவராகவும் அழகான திருமுக மண்டலத்துடன் இளமையுடன் இருப்பவராகவும் பொன் நிறத்துடன் இடது கையை நீட்டிக்கொண்டும் வலது கையை சிரஸில் வைத்துக்கொண்டும் அனைத்து திருவாபரணங்களுடன் இருப்பவராகவும் நாபி கமலத்திலிருந்து தங்கமயமான ப்ரஹ்ம்மா நான்கு கைகளுடன் நான்கு முகத்துடன் ஜடாமகுட தோன்ற்றத்துடனும் வலது கையில் ஜபமாலையும் இடது கையில் கமண்டலமும் மற்றொரு வலது கையை ஸவ்யமாகவும் மற்றொரு இடது கையை தொடையில் வைத்துக்கொண்டு இருப்பவராகவும் பண்ண வேண்டும். இவருடைய பின் பகுதியின் கர்ப்பக்ருஹ சுவற்றில் கிரீட மகுடங்களுடன் கூடிய பஞ்சாயுதங்களான சிகப்பு நிறமுடைய கௌமோதகி, மஞ்சள் நிறமுடைய சார்ங்கி, அஸி, ஆகியோரை ஸ்த்ரீ ஸ்வரூபமாகவும், சக்ரனை புருஷ ஸ்வரூபமாகவும், சங்கனை பூதாக்ருதியாக அனைவரையும் அழகான ரூபத்துடன் முடிந்தால் அவரவர்களின் ஆயுதங்களுடன் ஸ்வதையில் நிர்மாணிக்க வேண்டும்.  எம்பெருமானின் இடதுபக்கத்தில் ஸமுத்ரத்திலிருந்த உண்டாகி ஓடி வருவது போல் முழங்காலுக்கு மேல் உக்ரத்துடன் சிகப்பு நிறத்துடனும் தண்டத்துடனும் வக்ரமான பற்களுடன் பெரிய உருவத்துடன் பயந்து ஓடும் மது அசுரனையும் ச்யாம நிறத்துடன் மரத்தை கையிலேந்தியபடி வக்ரமான பற்களுடன் பெரிய உருவத்துடன் பயந்து ஓடும் கைடபாசுரனையும் இருக்கும்படி உருவமமைக்க வேண்டும். எம்பெருமானின் திருவடி அருகில் கீழ் பகுதியில் அழகான சிரித்த முகத்துடன் அஞ்ஜலி செய்து கொண்டிருக்கும் கருடனையும், அவர் அருகில் இடது பக்கத்தில் விஷ்வக்ஸேனரையும், எம்பெருமானின் திருவடி அருகில் அவரை பூஜிப்பதுபோல் கையில் புஷ்பத்துடன் சிகப்பான நிறத்துடன் இலா தேவியையும், ச்யாம நிறத்துடன் புண்யா தேவியையும், இவர்களின் வலது பக்கத்தில் பூமாதேவியையும் நவதால அளவைக் கொண்டு கர்ப்பக்ருஹத்தில் மூலபேரத்தை ஸ்வதையால் நிர்மாணம் செய்து அந்தந்த நிறங்களைக் கொண்டு மிகவும் அழகாக இருக்கும்படிச் செய்ய வேண்டும். இதன்படி நிர்மாணிக்கப்படும் ஸ்வாமியை யோகசயனம் என்பர்.


2. வீரசயனப் பெருமாள் -  அழகான திருவுருவத்துடன் சங்கு சக்ரம் இடதுகை நீட்டியும் வலதுகையை சிரஸின் கீழும் ஆக நான்கு கைகளுடனும் ஸ்ரீதேவி பூமிதேவி எம்பெருமான் திருவடிகளில் பாதத்தை பிடித்துக் கொண்டிருக்கும்படியும் மார்க்கண்டேயரிஷி எம்பெருமான் கீழ் பகுதியில் அமர்ந்திருக்கும்படியும் மற்ற பரிவாரங்கள் ஏற்கனவே கூறியபடி நிர்மாணம் செய்தல் வீரசயனப் பெருமாள் எனப்படும்.

3. போகசயனப் பெருமாள் -  அழகான திருவுருவத்துடன் இடது கையை நீட்டியும் வலது கையை புண்யன் போன்ற ரிஷிகளுக்கு அனுக்ரஹம் செய்யும்படி.ம் எம்பெருமானின் சிரஸின் அருகில் முன்பு கூறியபடி மகுடாபரணங்களுடன் ஸ்ரீதேவியையும் இடது பகுதியான திருவடியின் அருகில் பூமிதேவியையும் இருக்கும்படிச் செய்து வலது பக்கம் கீழ் பகுதியில் வக்ரதுண்டனையும் இடது பக்கத்தில் காத்யாயனியையும் மதுகைடபர்களை அவரவர்களின் ஆயுதங்களுடன் முன்பு கூறியபடி நிர்மாணம் செய்து மற்றவர்களை சுவற்றில் வரைந்து அல்லது முன்புபோல் ஸ்வதையில் நிர்மாண் செய்வது போகசயப் பெருமாள் எனப்படும்.

இவ்வாறு ஆதிகாலத்தில் ஸ்ரீவைகானஸ சாஸ்த்ரபடி நிர்மாணம் செய்யப்பட்டவர் தான் நம்முடைய ஸ்ரீவடபத்ர சயனபேரப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடபத்ர சயனர் த்யானம் –
ஸஸ்ரீமான் கமலேக்ஷணோ வடமஹா தாமாதயா வாரிதி:
கோலக்ஷேத்ரவரே நிகத்யபலினம் தம்காலநேமிம் ரணே.
ஸ்ரீகோதாவரஸூக்திகுந்தலபர ச்ரக்ப்யாப்ருசந்தோஷித:
ச்யேதே போகிவரே ப்ரபன்னஜனதா தம்ரக்ஷணம் சிந்தயன்.

இந்த சயனபேர நிர்மாண விஷயத்தில் மரீசி மஹரிஷி யோகம் வீரம் போகம் ஆபிசாரிகம் என நான்குவிதமாகக் கூறுகிறார். யோகம் செய்வதாக இருப்பின் யோக பேரத்தையும், வீரம் அல்லது வீர்யமேற்படவேண்டுமாகில் வீரபேரத்தையும், போகம் சந்தோஷமாக அனுபவிப்பதற்கு ஆசைப்படின் போகபேரத்தையும் எதிரிகளை ஜெயிக்க வேண்டுமாகில் ஆபிசாரிகபேரத்தையும் தேர்ந்தெடுத்து முதலில் கூறியபடி விமானம் கர்ப்பக்ருஹம் ஆகியவற்றை நிர்மாணம் செய்யச் சொல்லுகிறார். யோகபேரங்களை க்ராமத்தில் வெளியில் அமைதியான இடத்திலாவது, நதிகளின் கரையில், நதிகள் ஒன்றுகூடுமிடம், மலையின் உச்சியில் அல்லது காட்டின் நடுவில் ஆலயத்தை நிர்மாணம் செய்து அதில் பிம்பத்தை ஏற்படுத்தி அர்ச்சிக்க வேண்டும். வீரபேரத்தை கீழ் கூறிய இடங்களில் ஆலயமில்லாமல் மண்டபத்தில் ஏற்படுத்தி அர்ச்சிக்க வேண்டும். போகசயனத்தை க்ராமத்தில் மத்தியில் ஆலயத்தை நிர்மாணம் செய்து அதில் பிம்பத்தை ஏற்படுத்தி அர்ச்சிக்க வேண்டும். ஆபிசாரிக பேரத்தை காடு மலை ஜலம் நாட்டின் எல்லைக்கோடு எதிரியை வெற்றியடைய வேண்டிய இடம் (அதாவது எதிரிகளின் முன்பு)      பிம்பத்தை ஏற்படுத்தி அர்ச்சிக்க வேண்டும். ஒவ்வொரு பேரத்திலும் உத்தமம் மத்யமம் அதமம் என மும்மூன்று பிரிவுகளைக் கூறி அதில் சில விக்ரஹங்களை அதிகமாகக் கூட்டிக்கொள்ளும்படியும் சில பேரங்கள் இல்லாமலும் நிர்மாணம் செய்யு அர்ச்சிக்கப் பரிந்துரைக்கிறார்.

இந்த சயனபேர நிர்மாண விஷயத்தில் அத்ரி மஹரிஷியும் யோகம் போகம் வீரம் என மூன்று பேரங்களைக் கூறி அவற்றை நிர்மாணம் செய்யும் முறையையும் வர்ணகலாபத்தை மிகவும் விசதமாகப் பேசுகிறார். க்ரந்தம் அதிகமாக பெரியதாகிவிடும் என்பதால் பிம்பங்களின் அளவு வர்ணங்களை மிகவும் அதிகமாகக் கூறமுடியவில்லை மீதமுள்ளவற்றை ப்ருகு கூறியபடி செய்துகொள்ளவும். இல்லையேல் சில்பசாஸ்த்ரத்தில் கூறியபடி சில்பியைக் கொண்டு செய்து முடிக்கவும் என்கிறார். (ப்ரதிமாவிதிவர்ணம் ச விஸ்தராத்ப்ருகுருக்தவான். ஸர்வம் ச சில்பசாஸ்த்ரேண சில்பிபி: காரயேத் க்ரமாத்)
எம்பெருமானின் சயனபேர விஷயத்தை ஸ்ரீவைகானஸ சாஸ்த்ரம் தான் சிறப்பாக எடுத்துரைத்து அவரை பிரதிஷ்டை செய்யும் விஷயத்தையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இங்கு கூறியுள்ளபடி கர்ப்பக்ருஹத்தில் த்ருவபேரத்தை நிர்மாணம் செய்த பிறகு கௌதுக பேரத்தையும், உத்ஸவ பேரத்தையும், ஸ்னபன பலி பேரங்கள் நிர்மாணம் செய்வதைப் பற்றியும் மரீசி, ப்ருகு, அத்ரி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள். இதன்படி ஆலயத்தை நிர்மாணம் செய்து மஹாஸம்ப்ரோக்ஷணங்களைச் செய்தாலும் அல்லது இதன்படி இருக்கும் ஆலத்தை திருப்பணி புனராவர்த்த கைங்கர்யங்களைச் செய்து மஹாஸம்ப்ரோக்ஷணம் செய்தாலும் மஹாபுண்யமும் ஆயிரம் யாகம் செய்த பலனும் அனைத்து மக்களுக்கும் மன நிம்மதியும், வேண்டியவை அனைத்தும் கிடைத்து எதிரிகள் இல்லாமல் பொன்னுடனும் பொருளுடனும் மங்களத்துடனும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இப்புண்ணியம் அவரவர்களின் அடுத்த ஏழு தலைமுறைவரை சென்றடையும் என்றும் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்த்ரம் விசேஷித்து கூறியுள்ளது. இந்த உயர்ந்த எண்ணங்களுடன் நாம் அனைவரும் ஆலயத்தில் எம்பெருமானுக்கு பெரியாழ்வாரைப் போன்று நித்திய கைங்கர்யகளைச் செய்து நாமும் உலகுய்யுவோமாக.
மங்களானி பவந்து.