Wednesday, January 27, 2021

SANYASA ASHRAMA ACCORDING TO VAIKHANASA PHILOSOPHY

 

ஸ்ரீ:

ஸ்ரீமத்விகனஸமஹாகுரவே நம:

ஸ்ரீவைகானஸத்தில் ஸன்யாஸம்

(சங்கேந்தி டாக்டர் ஸ்ரீ.முத்துபட்டர், பேராசிரியர், ஸம்ஸ்க்ருதத் துறை, ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி, மைலாப்பூர், சென்னை-4)

 

நமது ஸ்ரீவைகானஸ கல்பசூத்ரத்தில் ஒன்பதாவது ப்ரச்னம் ஆறாவது கண்டத்தில் ஸ்ரீவைகானஸத்தின்படி ஸன்யாஸம் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நமது ஸ்ரீமத் விகனஸர் கூறுகிறார். ஒருவர் எழுபது வயதிற்கு மேல் ஸன்யாஸத்தை எடுத்துக்கொள்ளலாம். யார் ஒருவர் தனது பிள்ளையின் செலவில் ஜீவிக்கின்றாரோ அல்லது ஜலத்தில் அடிக்கடி ஸ்நானம் செய்து தன்னை சுத்தனாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறாரோ அவர்கள் இந்த ஆச்ரமத்தை எடுத்துக் கொள்ளலாம். இங்கு விகனஸமுநியின் அபிப்ராயம் என்னவென்றால் ஸன்யாஸி அடிக்கடி ஸ்நானம் செய்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பதாகும்.

வயதில் முதிர்ந்தவராயினும், ஞானத்தில் முதிர்ந்தவராயினும், தனக்கு பிள்ளைகள் இல்லையெனினும் அல்லது மனைவியை இழந்தவராயினும் (விதுரர்கள்) ஆச்ரமமில்லாமல் இருக்கக் கூடாது என்பதாலும் ஸன்யாஸத்தை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு பொறுமை, தைர்யம், ஒழுக்கம், ஸத்யம் ஆகியவற்றை தன்னிடத்தே இருப்பிடமாக்கிக் கொண்டு மனைவி, பிள்ளை, நண்பர்களிடத்தில் பற்றற்று, இந்த்ரியங்களை ஜெயித்து, நல்ல ஞானத்தைப் பெற்று, பாபமில்லாமல், நொண்டி, முடவன், கண் தெரியாதவன், ஊமை, தன்னால் எதுவும் செய்ய இயலாதவனைப் போல் இருந்து கொண்டு, வயதில் முதிர்ந்தவராயும், மெல்லிய தேஹத்துடனும், காமத்தில் முழுவதுமாக ஆசையின்றி, மம-காரம், அஹங்காரம், விருப்பு வெறுப்பை விட்டு, ஒரே குறிக்கோலுடன், இன்பம், துன்பம், கோபம், பொறாமை, ஆசை, போன்றவற்றை விட்டு, நிறைய தர்ம விஷயங்களைக் கேட்டவனாய், வேதத்தை அத்யயனம் செய்தவனாய், உலக நன்மைக்காக ஜபத்தைச் செய்தவனாய், தினமும் தன் கடைமைகளை விடாது கடைபிடித்தவனாய், முடிந்தளவு யாகங்களைச் செய்து, அனைத்து உயிரினங்களிடத்திலும் இரக்க குணமுடையவனாய், யோகத்தில் கூறியுள்ள நியம-யமாதிகளைப் பின்பற்றியவனாய், வைராக்யத்தில் நிலைகொண்டுள்ளவனாய், எவ்வித வியாதி, கஷ்டம் இல்லாமலும், இந்த்ரியங்கள் பாதிக்கப்படாமலும்  இருக்கும் ப்ராம்மணன் ஸன்யாஸியாக ஆவதற்கு தகுதியுடையவர் என்கிறார். இவ்வாறு இல்லாதவன் ஸன்யாஸ ஆச்ரமத்தை எடுத்துக் கொண்டால் அவன் பாபியாக ஆகிவிடுவான் என வேதம் கூறுகிறது என்பதை நிச்சயப்படுத்துகிறார்.

ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திற்குப் பிறகு விவாஹமானவுடன் பால்யத்தில், இளம் வயதில் அல்லது வயது முதிர்வு அடைந்தவுடன் ஸன்யாஸ ஆச்ரமத்தை எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் தன்னுடைய மனைவியை தனது பிள்ளை, பேரன், பெண்ணினுடைய பேரன் அல்லது மாமனாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இங்கு விச்வாமித்ரரின் ரிஷிபரம்பரையில் வந்த காலவர் என்ற ரிஷி கூறுகிறார் -  அனைத்து தர்மங்களைக் கொண்டிருக்கும் ப்ராஹ்மணன் ஒரு ஸன்யாசியிடம் சென்று அவரை ஆச்ரயித்து ஸன்யாஸாச்ரமத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். ஆசார்யவான் புருஷோ வேத: என்று கூறியுள்ளதால் அந்த ஸன்யாசியும் ஒரு வருடம், ஆறு மாதம், மூன்று மாதம் அவரை பரீக்ஷை செய்து நல்ல குணமுடைய, மற்றவர்களை சபிக்காத, நல்ல வம்சத்தில் வந்தவரா? என்பதைப் பார்த்து பிறகு ஸன்யாஸ ஆச்ரமத்தை கொடுக்க வேண்டும் என்கிறார். 

     ஸன்யாஸம் எடுத்துகொள்ளும் தினத்திற்கு முன் சுக்லபக்ஷத்தில் அஷ்டமியிலிருந்து பௌர்ணமிக்குள் ஏதாவது ஒரு நாளில் அஷ்டச்ராத்தத்தைச் செய்யவேண்டும். அதாவது தேவச்ராத்தம், ரிஷிச்ராத்தம், திவ்யச்ராத்தம், மனுஷ்யச்ராத்தம், பூதச்ராத்தம், பித்ருச்ராத்தம், மாத்ருச்ராத்தம், ஆத்மச்ராத்தம் என எட்டு ச்ராத்தத்தை முறைப்படிச் செய்யவேண்டும். இவைகளை தனித்தனியாக அல்லது ஒரே நாளிலாவது செய்யலாம் என்கிறார்.

புண்யாஹவாசனத்தின் முடிவில் நாந்தீ ச்ராத்தே பிண்டப்ரதானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம செய்துகொண்டு உபவீதியாகவே கிழக்கு முகமாக குந்துகாலிட்டுக்கொண்டு பூமியில் ஜலத்துடன் தர்பையால் உல்லேகனாதிகளைச் செய்து தர்பையைப் பரப்பி அதில் தேவதாதிகளுக்கு மந்த்ரமில்லாமல் ஜலத்தினாலும், பித்ரு மாத்ரு இவர்களுக்கு மட்டும் ஏற்கனவே தான் க்ருஹஸ்த ஆச்ரமத்தில் செய்த ச்ராத்தாதிகள் போல் மும்மூன்று பிண்டங்களை அவரவர்கள் ஸ்தானப் பெயரைச்சொல்லி பிண்டப்ரதானம் செய்து உபசாராதிகளைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும்.

தேவ-ச்ராத்தத்திற்கு ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வர ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், ரிஷி-ச்ராத்தத்திற்கு தேவரிஷி, ப்ரஹ்மரிஷி, ராஜரிஷி ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், திவ்ய-ச்ராத்தத்திற்கு வஸு, ருத்ர, ஆதித்ய ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், மனுஷ்ய-ச்ராத்தத்திற்கு ஸநக, ஸனந்தன, ஸநாதன ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், பூத-ச்ராத்தத்திற்கு ப்ருதிவ்யாதி ஐந்து பூதங்களுக்கும், பஞ்சேந்த்ரியங்களுக்கும் ப்ரதிநிதியாக இரண்டு அல்லது பத்து ப்ராஹ்மணர்களையும், பித்ரு-ச்ராத்தத்திற்கு ஸபத்னீக பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், மாத்ரு-ச்ராத்தத்திற்கு ஸபார்யாஸஹித மாதாமஹி, மாது: பிதாமஹி,  மாது: ப்ரபிதாமஹி ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும், ஆத்ம-ச்ராத்தத்திற்கு ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மன: ப்ரதிநிதியாக மூன்று ப்ராஹ்மணர்களையும் இவை அனைத்திற்கும் விச்வேதேவ ஸ்தானத்திற்கு இரண்டு ப்ராஹ்மணர்களையும், ப்ரஹ்மஸ்தானத்திற்கு இரண்டு ப்ராஹ்மணர்களையும், இல்லையெனில் விச்வேதேவ ஸ்தானத்திற்கு ஒருவரும், ப்ரஹ்ம-ஸ்தானத்திற்கு ஒருவரையும் எழுந்தருளச் செய்து அனைத்து ஸ்தானத்திலும் உபவீதியாகவே அக்ஷதையால் உபசாரங்களைச் செய்ய வேண்டும். இந்த ச்ராத்தங்களில் எள் உபயோகப்படுத்தக்கூடாது. ஆக மொத்தம் 35 (7x3=21, 5+5=10, 2+2=4) ப்ராஹ்மணர்களை வரித்து எட்டு ச்ராத்தங்களைச் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஒரே நாளில் செய்தால் விச்வேதேவ ஸ்தானத்திற்கு ஒரு ப்ராஹ்மணரை வரித்தால் போதுமானது. மந்த்ரபூர்வகம் ஒவ்வொரு ப்ராஹ்மணருக்கும் ஜலத்தினால் எட்டு மண்டலங்களைப் ப்ரகல்பிதம் செய்து பாதப்ரக்ஷாளனம், அர்ச்சனம், ஆவாஹனாதிகளைச் செய்ய வேண்டும். பின்பு வெளியில் சென்று இந்த்ராதி தேவதைகளை முறைப்படி நமஸ்காரம் செய்து, போஜன ஸ்தானத்தில் முறைப்படி அனைத்து ஸ்வாமிகளையும் எழுந்தருளச் செய்து ஸ்ரீமன்நாராயணனை த்யானம் செய்து அனைவருக்கும் பொஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணாதிகளைக் கொடுத்து சந்தோஷிக்கச் செய்து, பிண்டோத்வாஸனம் செய்து, ஆவாஹனம் செய்த ப்ராஹ்மணர்களிடம் உள்ள தேவதைகளை உத்வாஸனம் வேண்டும்.  

     ஸன்யாஸம் எடுத்துக்கொள்ளுவதற்கு முதல் நாள் சிகை, புருவம் இரண்டையும் விட்டுவிட்டு ஸர்வாங்கம் வபனம் செய்துக் கொண்டு ஸ்நானம் செய்து க்ராமத்தின் வெளியிலுள்ள நதிக் கரையில் அல்லது தேவாலயத்திலாவது ப்ராஜாபத்யம் என்கிற ப்ராயச்சித்தத்தைச் செய்து கொள்ளவேண்டும். ஆச்ரமமில்லாதவர் நான்கு ப்ராஜாபத்யத்தையும், முப்பது க்ருச்ரத்தையும் செய்ய வேண்டும். சாதாரணமான ஒருவர் ஸன்யாஸமெடுத்துக்கொள்ள விரும்பினால் அவர் ஸர்வப்ராயச்சித்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

மூன்று தண்டங்களை பசுவின் வால் கேசத்தினால் ஒன்றாகக் கட்டி முத்திரை (கொடி) கட்டப்பட்ட த்ரிதண்டம், உடுத்திக் கொள்வதற்கு காஷாய வஸ்த்ரம் (காஷாயம் என்றால் பற்பல வர்ணங்கள் இல்லாத சாதாரணமான வஸ்த்ரமாகும்) கமண்டலம் ஜலபாத்ரம் அதை மூடிக்கொள்ள சிறிய வெள்ளைநிறத் துணி சுத்தி செய்து கொள்வதற்காக மண் எடுத்துக் கொள்வதற்குரிய பாத்ரம், பிக்ஷாபாத்ரம்,  உபவீதம், மான்தோல், உத்தரீயம் ஆகிய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், நெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மூன்று முறை ப்ராசனம் செய்து தன்னைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்து கொள்ளவேண்டும்.

மறுநாள் பௌர்ணமியில் உபவாஸமிருக்கவேண்டும் அல்லது மூன்று மூறை ப்ராசனம் செய்து கொள்வதற்கு முன்பு மாவுபாதார்த்தங்களை சாப்பிட்ட பிறகு மூன்று முறை ப்ராசனம் செய்து ஆசமனம் செய்து உபவாஸமிருக்கலாம் என்பது சிலர் அபிப்ராயம்.

தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் ஆஹிதாக்னியாக இருந்தால் அவர் அக்னிஹோத்ரத்தை எப்பொழுதும் போல் பண்ணவேண்டும். க்ருஹஸ்தர் அக்னிஹோத்ரம் செய்பவராக இருந்தால் அவர் ஆஹவனீயாக்னி குண்டத்தை நிர்மாணம் செய்து அதில் அவருடைய அக்னியை ஸ்தாபித்து அக்னிஹோத்ரத்தைச் செய்யச் சொல்கிறார். அனாஹிதாக்னியாக அதாவது அக்னிஹோத்ரம் செய்யாமலிருப்பின் அவர் ஸ்தண்டிலத்தில் ஔபாஸனஹோமம், வைச்வதேவத்தையும், வானப்ரஸ்தராக இருந்தால் ச்ராமணகாக்னி குண்டத்தில் ச்ராமணகாக்னி ஹோமம், வைச்வதேவத்யத்தையும் ஹோமம் செய்ய வேண்டும். வேதத்தில் வைச்வானரம் த்வாதசகபாலம் நிர்வபேத் என்று கூறியுள்ளதால் தர்சபூர்ணமாஸ யாகத்தின்படி வைச்வானர இஷ்டியைச் செய்து தக்ஷிணாதிகளையும் ப்ராஜாபத்யாதிகளையும் செய்யச் சொல்கிறார். இதன் பிறகு ஸாயங்கால ஸந்த்யாவந்தனத்தைச் செய்து காலையில் ஹோமம் செய்த குண்டத்தின் அருகில் கார்ஹபத்யாக்னி குண்டத்தை நிர்மாணம் செய்து அதில் ஸன்யாஸ ஆச்ரமத்திற்கு உரிய ஹோமத்தைச் செய்யவேண்டும் என்கிறார்.

 கார்ஹபத்யாக்னியில் அக்னி மற்றும் ஆஜ்ய ஸம்ஸ்காராதிகளைச் செய்த பிறகு  (காலையில் அனுஷ்டித்த ஆஹவனீயாக்னியின் ஹோமத்தை பூர்ணாஹுதி செய்து முடித்து விடவேண்டும்) ஆஜ்யம், சரு. ஸமித் ஆகிய மூன்று த்ரவ்யத்தால் புருஷஸூக்த ஹோமத்தைச் செய்து அக்னயே ஸ்வாஹா, ஸோமாய ஸ்வாஹா, த்ருவாய ஸ்வாஹா, த்ருவகரணாய ஸ்வாஹா, பரமாத்மனே ஸ்வாஹா, நாராயணாய ஸ்வாஹா என்று ஹோமங்களைச் செய்யவேண்டும். இதன் பிறகு இந்த கார்ஹபத்யாக்னியின் அருகில் அமர்ந்து கொண்டு ஸ்ரீமன்நாராயணனை த்யானம் செய்துகொண்டு நாராயண காயத்ரியை ஜபம் செய்துகொண்டு தூங்காமல் இருந்து ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்துமுடித்து கார்ஹபத்யாக்னியில் விரஜா ஹோமத்தைச் செய்யவேண்டும்.  

அதாவது அக்னிஹோத்ரி ஏற்கனவே அக்னிஹோத்ரம் பண்ணுவதற்கு வைத்திருந்த அக்னிஹோத்ரஹவனி போன்ற பாத்ரங்களை கார்ஹபத்யாக்னியில் விஸர்ஜனம் பண்ண வேண்டும்.

க்ருஹஸ்தன், அனாஹிதாக்னி போன்றவர்கள் ஔபாஸனாக்னியிலும் வானப்ரஸ்தன் ச்ராமணகாக்னியிலும் அந்தந்த ஹோமத்தைச் செய்து முடிவில் அவர்கள் யக்ஞத்திற்கு பயன்படுத்திய பாத்ரங்களை விஸர்ஜனம் பண்ண வேண்டும்.

விதுரன் லௌகிகாக்னி அல்லது அரணியிலும், ப்ரஹ்மசாரியாகில் ஸமிதாதான அக்னி அல்லது லௌகிகாக்னியிலும் வைச்வானர யஷ்டியைச் செய்யாமல் அஷ்டமி அல்லது பௌர்ணமியில் அனைத்து ச்ராத்தாதிகளையும் செய்து யக்ஞத்தில் பயன்படுத்திய பாத்ரங்களை விஸர்ஜனம் பண்ண வேண்டும்.

பின்பு அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகி ஸாவித்ரியை ஜபம் செய்து பிக்ஷாச்ரமம் ப்ரவிசாமி என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ஆஹிதாக்னியாகில் அன்வாஹார்யாக்னி கார்ஹபத்யாக்னி இரண்டின் நடுவில் அமர்ந்து கொண்டு அக்னியை யாதே அக்னே யக்ஞியா என்ற மந்த்ரத்தால் மூன்று முறை பவந்தம் நஸ்ஸமனஸௌ என்று ஆத்மஸமாரோபனம் செய்துகொள்ள வேண்டும். இதேபோல் அனாஹிதாக்னி, பரஹ்மசாரி, விதுரன் போன்றவர்களும் அவரவர்களுடைய அக்னியை ஆத்மஸமாரோபனம் செய்துகொள்ள வேண்டும்.

கார்ஹபத்யாக்னியின் அருகில் அமர்ந்து கொண்டு ப்ரேஷம் பழய விஷயங்களை மறந்துவிட்டேன் என்று கூறி ஆசமனம் செய்வது போல் வலது கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு பூர்புவஸ்ஸுவஸ்ஸன்யாஸம் மயா என்று கூறி மௌனமாக ஒரு முறை சாப்பிடவேண்டும். பின்பு ஆசமனம் செய்ய வேண்டும். இதன்பிறகு உபவீதம், ஸன்யாஸ வஸ்த்ரம், மான்தோல் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று அல்லது ஜலாசயத்தை அடைந்து ஸம்பாரங்களை கரையில் வைத்துவிட்டு ஜலத்தில் மார்பளவு ஜலமிருக்கும் அளவு நின்று கொண்டு இரண்டு கைகளை மேலே தூக்கிக் கொண்டு ப்ரேஷ மந்த்ரம், பூர்புவத்தைச் சொல்லி அனைத்தையும் ஜலத்தில் விட்டுவிட வேண்டும். உபநயனத்தில் கூறியுள்ளபடி ஆசார்யன் அல்லது வேதம் அத்யயனம் செய்து யோக்யதாம்சமுடைய க்ருஹஸ்தன் காஷாய வஸ்த்ரம், நான்கு உபவீதங்கள், க்ருஷ்ணாஜினம், உத்தரீயம் ஆகியவற்றை அதற்குரிய மந்த்ரங்களைக் கூறிக் கொடுக்கவேண்டும். அவர் அவற்றை வாங்கி ஜலத்திலிருந்தபடியே உடுத்திக் கொண்டு பழைய வஸ்த்ரங்களை ஜலத்தில் விட்டுவிட வேண்டும்.

தேவஸ்யத்வா, யோ மே தண்ட:, ஸகா மே கோபாய இந்த மூன்று மந்த்ரங்களால் த்ரிதண்டமும், யதஸ்ய பாரே ரஜஸ: என்று சிறிய கயறும், யேன தேவா: பவித்ரேண என்று பவித்ரமும், யேன தேவா: ஜ்யோதிஷா என்று கமண்டலு, ம்ருத்பாத்ரம் ஆகியவற்றை ஸன்யாஸி வாங்கிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் வாங்கிக் கொண்டு மறுபடியும் அகமர்ஷணஸூக்தம் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஆசமனம் செய்து 16 முறை ப்ராணாயாமம் செய்து ஆயிரம் முறை அல்லது நூறு முறை ஸாவித்ரீ மந்த்ரத்தை ஜபம் செய்ய வேண்டும். பிறகு பிக்ஷாபாத்ரம், மரத்தால் ஆனது, பித்தளை பாத்ரம் அல்லது மண் பாத்ரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்கல பாத்ரத்தை உபயோகப் படுத்துவேண்டாம் என்கிறார்.

தனித்தனியாக ப்ராணாயாமம் செய்து ஸப்தவ்யாஹ்ருதிபி: தர்ப்பயாமி என்று கூறி தேவதைகளுக்கு ஜலத்தில் ஓம் பூஸ்தர்பயாமி என்று ஜலத்தினால் தர்ப்பணமும் செய்து ஓம் பூஸ்ஸ்வதா தர்ப்பயாமி என்று பித்ருக்களுக்கும் ஜலத்தினால் தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் எந்த பெயரையும் கூறக்கூடாது. உத்வயம் தமஸ: என்று உபஸ்தானம் செய்து ஜலாசயத்திலிருந்து பர்ணசாலைக்கு அல்லது அவரவர்களின் மடத்திற்கு வந்து அனைவருக்கும் அபயத்தைச் செய்யவேண்டும்.

இதன் பிறகு இவர் எப்பொழுதும் அத்யாத்ம குணத்துடன், பிக்ஷை செய்தும் நியம-யமங்களை கடைபிடித்துக் கொண்டும், இந்த்ரியங்களை கட்டுப்படுத்தியும், த்யானயோகத்தினால் பரமாத்மா ஸ்ரீமன்நாராயணனைப் பார்க்க வேண்டும். இதுவே ஸன்யாஸிகளின் தர்மமாகும். இவ்வாறு நமது ஸ்ரீமத்விகனஸர் தனது கல்பசூத்ரத்தில் ஸன்யாஸம் எடுத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு இந்த ஆஸ்ரமத்தை எடுத்துக் கொண்டு அதன் தர்மத்தை கடைபிடிக்கலாம் என்பதாக அனுக்ரஹித்துள்ளார்.         

 

மங்களானி பவந்து